நாமக்கல், பொம்மைகுட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் வருகிற பிப்ரவரி 16ம் தேதி SPB சரண் மற்றும் சுவேதா மோகன் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் வெளியீட்டு விழா திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி அமைப்பாளர் ஶ்ரீ கோகுல் ஈவெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அஜீத் ராஜா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்லூரி நிறுவன தலைவர் மு.கருணாநிதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் த.ஜெயகுமார் வெள்ளையன், ரெப்கோ வங்கி வீடு கடன் பிரிவு தலைவர் தங்கராசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் பேசிய பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகரில் இது போன்ற நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தும் நிகழ்ச்சி அமைப்பாளருக்கு தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து விஜய் டிவி சூப்பர் சிங்கர் அக்ஷரா லட்சுமி மற்றும் மைத்ரேயன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டினை வெளியிட விவேகானந்தா கல்லூரி நிறுவன தலைவர் கருணாநிதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

பிப்ரவரி 16ம் தேதி நாமக்கல் நகரில் முதல் முறையாக நடைபெறவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு நுழைவு கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர் தெரிவித்தார்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராயல் பத்மநாபன், நிகழ்ச்சி உதவியாளர் விஜயகுமார் மற்றும் விவேகானந்தா கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.