ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பி. மோகன்தாஸ் என்பவரிடம் ரூ.12.60 லட்சம் மோசடி – திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் கைது – மற்றொருவர் தலைமறைவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அமைச்சர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் பி மோகன் தாஸ். இவர் ராசிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவன் மூலம் திருச்செங்கோட்டை சேர்ந்த மருதமலையான் டிரேடர்ஸ், மற்றும் விபிஆர் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் சந்திரன் என்பவர் மகன் விஜயகுமார், அவரது அக்காவின் கணவர் சாமிநாதன் என்பவரது மகன் சங்கரபாணி ஆகிய இருவரும் குறைந்த விலையில் பழைய இரும்பு கிடைப்பதாக கூறி ரூ.8.80 லட்சம் வங்கி மூலமும், ரூ.3.80 லட்சம் நேரடியாகவும் என மொத்தம் ரூ.12. 60 லட்சம் பெற்றார்களாம்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் பழைய இரும்பை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். மேலும் பணத்தையும் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் வாகனத்தை விற்பனை செய்து பணம் தருவதாக கூறியும் தராமல் இழுத்தடித்து வந்தார்களாம். நேரடியாக திருச்செங்கோடு சென்று பணம் கேட்கும் போது மோகன்தாசை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனை அடுத்து தற்போது மோகன்தாஸ் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இந்த புகாரின் பேரில் விஜய குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள அவரது அக்கா கணவர் சங்கரபாணியை போலீஸார் தேடி வருகின்றனர்.