திமுக நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த தினவிழா, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் ஆண்டகளூர்கேட், பிள்ளாநல்லூர் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் பங்கேற்று அரசின் சாதனைகளை விளக்கிப்பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியது: முதலமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று தேவையானவற்றை பூர்த்தி செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தேவையானவற்றை செய்துதர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துதரப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படை தேவைகள் அனைத்தையும் செய்துவருகிறோம். மேலும் ஆதி திராவிட மக்களுக்கு கல்வி வளர்ச்சிக்கானாலும், குடியிருப்பு வசதியானாலும், அடிப்படை வசதியானாலும் அனைத்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ராசிபுரம் தொகுதியில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் குடியிருப்பு திட்டம் என பல திட்டங்கள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் தொகுதியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கூட்டத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசியது:
நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை 50 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றும் இதுவரை சாலை வசதி அமைக்கப்படாத போதமலைக்கு ரூ.140 கோடிக்கு மலைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் மாவட்டத் தலைமை மருத்துவமனை அமைக்க ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தீர்க்கப்படாத பிரச்சனையான 3 ஆயிரம் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம், ரூ.200 கோடிக்கு மேற்பட்ட நிதியில் நாமக்கல் புறவழிச்சாலை, ரூ.100 கோடியில் புதிய பால் பண்ணை, நாமக்கல் முதல் முசிறி வரையிலான புதிய சாலை, நாமக்கல் சிப்காட் தொழிற்சாலை என பல திட்டங்கள் அரசு வழங்கியுள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு அடிப்படை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராசிபுரம் தொகுதியின் குடிநீர் தேவைக்கு ரூ.854.37 கோடி மதிப்பில் நடந்து வரும் புதிய கூட்டு குடிநீர் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் 2054-வரை இன்னும் 30 ஆண்டுகளுக்கு இப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது கரோனா காலகட்டம் என்பதால் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என சொன்னோம். அதனை வழங்கினோம். மகளிர் உரிமை வழங்குவோம் என சொன்னோம் அதனையும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அரசு அளித்து வருகிறது. புதுமை பெண் திட்டத்தின் கீழ் பள்ளி முடித்து தனியார் கல்லூரியோ, அரசுக் கல்லூரியோ சேரும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.நியாய விலைக்கடையில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. விவசாயக்கடன் 5 சவரன் வரை உள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது இந்த அரசு. மகளிருக்கு சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் எந்த கோரிக்கை மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் என்றும் இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.