ராசிபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மீண்டும் ராசிபுரம் தொகுதி விஐபி அந்தஸ்து பெறுமா என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் எழுந்துள்ளது.
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி 2011 தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ப.தனபால் சட்டப்பேரவை துணைத் தலைவராகவும், பின்னர் பேரவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இதனை தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெ.சரோஜா வென்று சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் மா.மதிவேந்தன் வெற்றி பெற்று சுற்றுலா துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என பொறுப்புகளை வகித்தார். இது போல் தொடர்ந்து இத்தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சரக்களாக விஐபி அந்தஸ்துடன் வலம் வந்த நிலையில், தற்போது நடைபெற்ற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட டி.லோகேஷ் தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு தொகுதியில் வெற்றி பெற்று பேரவைத் தலைவராக இருந்த ப.தனபால் மகன் ஆவார். இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள விஜய் அமைச்சரவையில் லோகேஷ் தமிழ்செல்வன் இடம் பெற்று, தொகுதி விஐபி அந்தஸ்தை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





