நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டைபேரூராட்சி பகுதியில் நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இந்த விழிப்புணர்வு முகாமினை நடத்தியது.

இதில் கேரி பேக் போன்ற நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முன்னதாக ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமையில் சங்க நிர்வாகிகள், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில் பங்கேற்றோர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பிரதான சாலை வழியாக நாமகிரிப்பேட்டை பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.

பின்னர் ரோட்டரி சங்கத்தினர், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்று அரியா கவுண்டம்பட்டி நீர்பிடிப்பு ஏரி பகுதியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து, அப்புறப்படுத்தி நீர்நிலைகளை தூய்மைப்படுத்தினர்.