நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகியவற்றின் சார்பில் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் தவிர்ப்பது, பாதுகாப்பான வாகன போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆ.செல்வகுமார், தலைமையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் கீதாலட்சுமி, ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டிய நாடகம், கரகாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள், வளைவு பகுதியில் ஏற்படும் விபத்துக்கள், பஸ் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்கள், அதிகளவு உயரத்தில் பாரம் ஏற்றிச் சென்றால் ஏற்படும் விபத்துக்கள், மோட்டார் சைக்கிளில் அதிக நபர்கள் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள், ஹெல்மெட் அணிவதின் அவசியம், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தி செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும்
விபத்து தடுப்பு குறித்து மக்களிடையே கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.