ராசிபுரம் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வருடாந்திர ஆய்வுக்கு வியாழக்கிழமை உட்படுத்தப்பட்டன. பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியன இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணினை மேற்கொண்டு வருகின்றன.

இதனையடுத்து ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள், வாகனத்தின் காப்பீடு, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேகக்கட்டுபாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, வாகனத்தின் முன்புறம், பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள், ஜன்னல்கள், பேருந்தின் தளம், மாணவர்களின் இருக்கை வசதிகள், புத்தகப்பை வைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 250 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ததில், 23 வாகனங்கள் மட்டும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் சாலையில் இயக்கும் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றத. இதில் பார்வை திறன் குறித்து முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் போது நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இ.எஸ்.முருகேசன், ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார், ராசிபுரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கே.நடராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டனர்.