ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சி. ரமேஷ் உத்தரவின் பேரில் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் உள்ளதா என கண்டறிய புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சி துப்புரவு அலுவலர் மு.செல்வராஜு தலைமையில் நகரில் நடைபெற்ற ஆய்வில் தாச தெருவில் உள்ள ஒரு கடையில் அரை கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போல் சின்ன கடை வீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் 22 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கடைகளுக்கு அபராதமாக ரூ. 12 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர் கோகுல், தூய்மை பணி ஆய்வாளர் ஆனந்தகுமார், மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்தமிழ் தமிழ்செல்வன் உள்ளிட்ட பரப்புரையாளர்கள் பலர கலந்து கொண்டனர்.





