ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் ஒன்றிய பாஜக சார்பில், இலவச பொது மருத்துவம், எலும்பு – மூட்டு தேய்மானம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவில், வெண்ணந்தூர் ஒன்றிய பாஜக தலைவர் திவ்யா சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.பி.சரவணன் முன்னிலை வகித்தார். பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்துப் பேசினார்.

இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு, இணையதளத்தில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு கணக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, பொது மருத்துவ பரிசோதனை, எலும்பு மூட்டு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, கண் பரிசோதனை போன்றவை குறித்து மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில், 10 மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக இந்த முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசியபோது, நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப் பாதுகாப்பு வழங்கும் வகையில், சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்திட வேண்டும். மருத்துவம் மற்றும் நிதி சார்ந்த சமூக பாதுகாப்புத் திட்டங்களில் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும் நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இத்திட்டங்கள் மத்திய அரசால் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்றார்.
இதில் பாஜக தகவல் தொழில்நுட்பம் – தரவு மேலாண்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஆர். தீனதயாளன், பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆர். லோகேந்திரன், மாவட்டச் செயலாளர் தமிழரசு உள்பட பலரும் கலந்துகொண்டனர்.