ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமை வகித்தார்.

முன்னதாக ரோட்டரி மாவட்ட ஆளுநருக்கு ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் முதல் மரியாதை வழங்கப்பட்டு, பயனாளிக்கு கோ தானம், கோவிலுக்கு பிரசாத கவர் வழங்கப்பட்டது.

பின்னர் காட்டூர் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு எந்திரம் வழங்குதல், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் புதிய டைல்ஸ் ஒட்டி புதுக்கப்பட்டதை ஒப்படைத்தல், சாணார்புதூர் பகுதியில்பயனாளிகளுக்கு சுழற்சி முறை ஆடு வழங்குதல், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்ட புதிய சிமென்ட் பெஞ்ச் வழங்குதல், அரியாகவுண்டம்பட்டி சாரோன் முதியோர் இல்லத்தில் உணவு கூடம் திறப்பு , முதியோருக்கு வேட்டி, சேலை வழங்குதல், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்குதல், தூய இருதய பள்ளிக்கு குடிநீர் எந்திரம், உணவு தட்டுகள் வழங்கல், பெண்களுக்கு தையல் எந்திரம் சலவை எந்திரம் வழங்குதல் போன்ற ரூ.5.60 லட்சம் மதிப்பிலான 20 திட்டப்பணிகளை மாவட்ட ரோட்டரி ஆளுநர் வி.சிவக்குமார் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிப் பேசினார். இதில் ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கு.பாரதி, சங்கச் செயலர் கே.ராமசாமி, பொருளாளர் பி.கே.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.