நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் ஆங்கிலேயர் காலம் முதல் கிராமத் திருவிழாவின் போது பின்பற்றப்படும் நீதிமன்ற விசாரணைகள் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மன் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் ஏப்.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் மற்றும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனபிரியா உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் சுற்று வட்டார பகுதியின் இருந்து வந்திருத்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் பின்புறம் பக்தர்கள் மஞ்சள், வெள்ளை நிறை ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலையுடன் உருளைத்தாண்டம் போட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இத்திருவிழாவினை தொடர்ந்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைமுறைகள் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், திருவிழாவின் போது நடைபெறும் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும் உடனே விசாரித்து அன்றே தீர்ப்பு வழங்கும் நோக்கத்திற்காகவும் திருவிழாவின்போது ராசிபுரத்தில் இயங்கி வரும் குற்றவியல் நீதிமன்றமானது 2 நாட்கள் புதுப்பட்டி கிராமத்தில் நடத்தப்படுவது வழக்கம். ஆங்கிலேயர் காலம் முதல் இந்த நீதிமன்ற நடைமுறை இன்றளவும் இது நடந்து வருகிறது.

இங்கு நடந்த வழக்கு விசாரணையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு தலா 1000ரூபாய் வீதம் என அபராதம் விதித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோனபிரியா தீர்ப்பளித்தார். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மோகன், சிவலீலா ஜோதி, நீதிமன்ற பணியாளர்கள்,காவல் துறையினர் என பலர் இருந்தனர்.