நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்- ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் இணைந்து தன்னார்வமாக மாணவர்களுக்கான ஆக்க நலவியல் என்ற தலைப்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் செயலாளர் கே.ராமசாமி வரவேற்றுப் பேசினார். கிளப் தலைவர் எம்.முருகானந்தம் தலைமை வகித்து, பள்ளி ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதில் அக்கரை செலுத்துவதுடன் மாணவர்கள் உடல் நலனிலும் அக்கரையுடன் செயல்படுவது அவசியம் எனப் பேசினார். ரோட்டரி கிளப் முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், ரோட்டரி மகிழ்ச்சிப் பள்ளிகளின் சேர்மேன் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுப் பேசுகையில், வாசிப்பு திறன் அதிகரிப்பு, மாணவர்களின் அறிவு வளர்ச்சி, ஆளுமை திறன், உளவியல் மேம்பாட்டு போன்றவற்றிற்கு உதவ வேண்டும் என்றனர்.

மேலும் சர்வதேச அளவில் கல்வி வளர்ச்சியில் இந்தியா மேம்பாடு பெற்றுள்ளதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. உயர்கல்வி வளர்ச்சியில் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா 56 சதத்தை எட்டியுள்ளது. இதற்கு ஆசிரியர்களின் அர்பணிப்புத் திறனே காரணம். தொடர்ந்து சமுதாய வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் ஆசிரியர்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என்றனர். நாமக்கல் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு.செல்வம் பேசுகையில் மாணவர்களின் நலன் சார்ந்த ஆசிரியர்களின் பணிகள் மேம்படும் போது, நல்ல மாணவர் சமுதாயம் உருவாக வாய்ப்பு ஏற்படும். இதற்கு ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்பும், ஆசிரியர்களின் தன்னார்வ பங்கேற்பு என்பதும் தான் காரணம் என்றார். பயிற்சி முகாமில் அன்னைக்கு ஒர் ஆரிராரோ என்ற தலைப்பில் ஜாக்குலின்மேரி எழுதிய கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது.

ரோட்டரி கிளப் தலைவர் எம்.முருகானந்தம், டாக்டர் எம்.ராமகி்ருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட பங்கேற்ற ஆசிரியர்கள் இதனை பெற்றுக்கொண்டனர். பயிற்சி முகாம் குறித்து உஞ்சனை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியை ப.சுமதி, மணலி ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.செந்தில் வெங்கடாஜலம் ஆகியோர் பேசினர். முடிவில் ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார். பயிற்சி முகாமில் ரோட்டரி உதவி ஆளுநர் கு.பாரதி, பொருளாளர் பி.கே.ராஜா, நிர்வாகிகள் வெங்கடாஜலம், இளங்கோ, நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.