ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழாவினை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறந்த செயலாற்றி வரும் மகளிர் கெளரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கும் விழா ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினவிழாவினை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராசிபுரம் ஹோட்டரி ஹாலில் சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் தலைவர் (தேர்வு) இ.என்.சுரேந்திரன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கு.பாரதி, இன்னர் வீல் சங்கத் தலைவர் சுதாமனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்து சமுதாயத்தில் பெண்களின் பங்கு, மகளிர் தினத்தின் சிறப்பு, சமுதாயத்தில் பெண்களின் தற்போதைய நிலை போன்றவை குறித்தும் பேசினர். விழாவில் பலரும் சமுதாயத்தில் பெண்களின் உன்னதம் குறித்து விளக்கிக்கூறினர்.

விழாவில் டாக்டர் ஹானிமன் ஹோமதியோ மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பிந்து, சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஜி.கலையரசி, ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி ஆங்கிலத் துறைத்தலைவர் பி.மைதிலி, தாய்களை இழந்த ஆதரவற்ற சிசுக்களுக்கு பல மாதங்கள் தாய் பால் தானமாக வழங்கிய ராகவி தினேஷ் ஆகியோரின் கல்விப்பணி, சமுதாயப்பணியை பாராட்டி கெளரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டனர். இதில் ரோட்டரி கிளப் செயலர் கே.ராமசாமி, பொருளாளர் பி.கே.ராஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.குணசேகர் உள்ளிட்ட ரோட்டரி கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.