நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் குறித்து தனிப்பட்ட சுயலாபத்திற்காக சிலர் பொய்யான தகவல்கள் சமூக ஊடங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம், விஜிலென்ஸ் பெயர்களை தவறாக பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நகராட்சி அலுவலர்களை பணி செய்யவிடாமல் நேரில் மிரட்டல் விடுக்கின்றனர். இது போன்றவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாதேஸ்வரன் என்பவர் சிலநாட்களுக்கு முன் தகவல்கள் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு முறையான தகவல்கள் நகராட்சி அலுவலர்கள் கொடுக்கவில்லை எனக்கூறி நேரில் சென்று தகவலரான நகராட்சி மேலாளர் ராமசந்திரன் என்ற அலுவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சூ.கணேஷ் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நகராட்சி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மாதேஸ்வரன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் நகராட்சி நிர்வாகம் எந்தவித திட்டப்பணிகள் செய்யாமல் மக்களிடம் கெட்டப்பெயர் எடுத்துள்ளது. நகராட்சியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என சமூக ஊடகங்களில் மாதேஸ்வரன் பேசிய வீடியோ காட்சிகள் பரவிவருகிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ராசிபுரம் நகராட்சியின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பணிகளை செய்து முடிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதைகுழி சாக்கடை திட்டம் என்ற பெயரில் நகராட்சி முழுவதும் சாலைகளை பறித்து போடப்பட்ருந்தது. ஆனால் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கட்டமாக அனைத்து சாலைகளும் புதியதாக போடப்பட்டன. அதேபோல், ராசிபுரம் நகராட்சியை பொலிவுடையாக மாற்ற சேலம் ரோடு, நாமக்கல் ரோடு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலங்களில் இருந்து கோனேரிப்பட்டி வரை ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.2. 43 கோடி மதிப்பில் தினசரி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. வாரசந்தையில் மழை, வெயில் காலங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக ரூ.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த பழைய பஸ்நிலையம் பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதியதாக வணிக வளாகம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு அதிக நிதி கிடைக்கும். இதனால் தூய்மை பணியாளர்களுக்கு மாதத்தோறும் நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்க முடியும். ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் பிரச்னை என்பது நீண்ட காலமாக உள்ளது. 37 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிமெண்ட் குழாய்களினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆங்காங்கே தொடர்ந்து வெடிப்பு ஏற்படுவதால்15 முதல், 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கும் செய்யப்படும் நிலை இருந்தது. உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைத்துள்ளோம். தற்போது புதிய காவிரி கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2026 பிப்ரவரி மாதம் இறுதிக்குள் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கிடைக்கும். இதனால் நாள்தோறும் குடிநீர் கிடைக்கும். ஒவ்வொரு வார்டுக்கும் கழிவறை, கோனேரிப்பட்டி ஏரியை சுற்றி நடைமேடை, பூங்கா, நாராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்பட அடிப்படை வசதிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம்.
ஆனால், இதனை மறைத்த ஒருசிலர் தகவல் அறியும் உரிமை சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறை பெயரை பயன்படுத்தி சமூக ஆர்வலர் என்ற பெயரில் நகராட்சி அலுவலர்களை மிரட்டி வருகின்றனர். ராசிபுரம் நகராட்சி மட்டுமின்றி திருச்செங்கோடு, குமாரபாளையம், இடங்கனசாலை, இடைப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட நகராட்சிகளிலும் இதே முறையில் அதிகாரிகளை மிரட்டி வருகிறார். தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். தங்களது சுயலாபத்திற்காக இதுபோன்ற வேலை செய்து வருகின்றனர். பொய்யான தகவலை பரப்பி சுயலாபம் பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தெரிவித்தார். பேட்டியின் போது நகர்மன்றத் துணைத் தலைவர் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.