ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கூனவேலம்பட்டிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பாளையம் கிராமம் உள்ளது.
இப்பகுதியில் 8- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் பின்புறம் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பெண்கள் கழிப்பிடம் உள்ளது.
வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாத பெண்கள் இதனை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.
இதனால் பெண்கள் பலர் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கழிப்பிடத்தை பயன்படுத்திய வேண்டிய நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் பலர் இதனை சுற்றியுள்ள பகுதியில் திறந்தவெளியில் மலம் கழித்து செல்வதால் இப்பகுதி முழுவதும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலேயே நியாய விலை கடையை செயல்பட்டு வருவதால் அங்கு ஒரு பொதுமக்களும் இந்த சுகாதார சீர்கேட்டை சகித்துக் கொண்டு முகம் சுளித்தவாறு செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலை குறித்து ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம சபை கூட்டங்களில் பலமுறை புகார் தெரிவித்தும், மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் இதில் தலையிட்டு உடனடியாக பொதுக் கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி பெண்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த பொது கழிப்பிடத்தால் சுற்றுப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் முன்னர் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் திறந்த வெளியில் யாரும் கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என்ற சுகாதார திட்டத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவது வேதனை க்குரியது.