ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் தர்மசம்வர்த்தினி, அருள்மிகு ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் கோவில்களில் மார்கழி மாத கூட்டு வழிபாடு மன்றம் சார்பில் 75-வது பவள விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோவில், ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில்களில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முழுவதும் நாள்தோறும் அதிகாலை கூட்டு வழிபாடு நடைபெறும். இந்த வழிபாடு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, 75-வது பவள விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கூட்டு வழிபாடு மன்றத்தின் நிர்வாகி நல்லாசிரியர் எம்.குமாரசுவாமி தலைமை வகித்தார். ராசிபுரம் புலவர் பெ.பரமேஸ்வரன் வரவேற்றுப் பேசினார் புதுக்கோட்டை சுவாமி சம்விதானந்த சரஸ்வதி புவனேஸ்வரி இதில் பங்கேற்று அருளாசி வழங்கிப் பேசினார். தேனி வேதபுரி ஸ்ரீசுவாமி சித்பவானந்த ஆசிரிமம் ஸ்ரீசுவாமி சித்பவானந்தா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். இவ்விழாவில் வார வழிபாட்டு சங்க நிர்வாகிகள் கே.கே.வி. கிருஷ்ணமூர்த்தி , ஜே.சி.ஐ., பி பூபதி, ஆறுமுகம் ,ஜோதி ராமலிங்கம் , லோகேஷ், ராஜராஜ சோழன் , சோமசுந்தரம், ஜெகதீசன் ,சக்தி, மாரி செட்டி,உட்பட பலரும் பங்கேற்றனர்.