வயநாடு தொகுதி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளதையடுத்து ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் முனியப்பம்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சியின் நாமகிரிப்பேட்டை வட்டாரத் துணைத் தலைவர் எஸ்.செளந்திரராஜன் தலைமையில், கட்சியினர் பலர் பங்கேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் எம்.சுப்ரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே.ஆர்.ராஜ்குமார், ராசிபுரம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.தாஸ்முகமது, மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பொன்னைய்யன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பேசினர். முன்னதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் கட்சிக்கொடியேற்று விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், வட்டாரத் தலைவர்கள் ஷேக் உசேன், டி.பி.இளங்கோ, கணேசன், ஆர்.புதுப்பாளையம் கிராம கட்டி தலைவர் பிரகஸ்பதி, என பலரும் கலந்து கொண்டனர்.