திருப்பூர் மாவட்டம் அவினாசி (தனி) தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ராசிபுரத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் எஸ்.கமலி, மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
ராசிபுரம் நகரை சேர்ந்தவர் ஜெ.ஜெ.செந்தில்நாதன். இவர் நாமக்கல் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகளாக இருந்து பணியாற்றி வந்தார். தமிழக வெற்றி கழகம் தொடங்கியது முதல் மாவட்டச் செயலாளராக இருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட ஜெ.ஜெ.செந்தில்நாதன் விரும்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வந்த, ராசிபுரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ஜெ.ஜெ.செந்தல்நாதன் மகள் எஸ்.கமலி, அவினாசி (தனி) தொகுதி்யில் தவெக சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அரசியலுக்கு புதியவாரன ராசிபுரத்தை சேர்ந்த அவர் புதிய தொகுதியான அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டு, பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகனை விட 15373 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.





