நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரட்சி பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு குழாய் பாதையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ராசிபுரம் நகருக்கு மட்டுமின்றி வழியோரங்களில் பல்வேறு பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளுக்கான குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து எடப்பாடி அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

எடப்பாடி – ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 54 கி.மீ. தொலைவில் உள்ள எடப்பாடி எருமப்பட்டி பகுதியில் இருந்து காவிரி நீர் ராசிபுரம் பகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் திட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலானதால் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. தற்போது எடப்பாடி கேட்டுக்கடை, எருமப்பட்டி நீர் உந்து நிலையம் அருகிலும், குப்பண்டபாளையம், சுண்டமேட்டூர் அருகிலும் குடிநீர் குழாய் பாதையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நகருக்கான குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. இதனால் வாரம் ஒருமுறை வினியோகம் செய்யப்படும் குடிநீர் தற்போது 15 நாட்களாகியும் பல இடங்களுக்கு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என தெரிகிறது.
நகர்மன்றத் தலைவர் நேரில் ஆய்வு:
இந்நிலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் நகராட்சி பணியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதே போல் தமிழ்நாடு குடிநீல் வடிகால் வாரிய பொறியாளர்களுடனும் சீரமைப்பு பணிகள் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விரைந்து பணிகளை முடித்து குடிநீர் வினியோகத்தை இயல்புக்கு கொண்டு வர வலியுறுத்தினார். ஒரிரு நாட்களில் குழாய் உடைப்பு பணிகள் சீர் செய்யப்பட்டு ராசிபுரம் நகருக்கான குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.