நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றம் செய்ய நகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. ராசிபுரம் நகராட்சியின் இந்த முடிவை கண்டித்து பஸ் நிலைய மீட்புக்குழு சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் சுதந்திரத்தினத்தன்று கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நகராட்சி முன் முயற்சி எடுத்துள்ளது. அணைப்பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து 7 ஏக்கர் நிலம் நகராட்சியால் தானமாக பெறப்பட்டுள்ளது. நகரில் இருந்து அணைப்பாளையம் 7 கி.மீ. தொலைவில் உள்ளதால் இது நகரப் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என இதற்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலிப் போராட்டம் போன்றவை நகரில் நடத்தப்பட்டன. இந்நிலையில், நகராட்சியின் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சுதந்திர தின நாளன்று வீடுகள், வணிக நிறுவனங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என பேருந்து நிலைய மீட்புக்குழு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் வீடுகள், வணிக நிறுவனங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும் பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் நகரத்தை காற்ற வேண்டும் என காந்தி சிலை முன்பாக பலரும் கோஷமெழுப்பினர்.