ராசிபுரம் பேருந்து நிலையத்தை 7 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் நகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் அழைப்பு விடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் (30.07.24) பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பங்கேற்று உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் அமர்ந்துள்ளார். இதில் அதிமுக, பாஜக., மதிமுக, தேமுதிக., கம்யூனிஸ்டு, பாமக., விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கெடுத்துள்ளனர்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தை 7 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் நகராட்சியின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்தில் பேருந்து நிலையம் மாற்றி அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர், வணிகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஜூலை.18-ல் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை:
இதே போல் மக்கள் நலக்கூட்டணி சார்பில் ஜூலை.20-ல் பேருந்து நிலையம் முன்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றோர் பேருந்து நிலையம் மாற்றும் முயற்சிக்கும், அணைப்பாளையம் பகுதியை தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமெழுப்பினர். தொடர்ந்து பேருந்து நிலைய மீட்புக்குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் உண்ணாவிரதப் போராட்டம் பேருந்து நிலையம் முன்பாக நடத்திட அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை.31) காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். பேருந்து நிலையம் மாற்றும் முயற்சிக்கு இதில் பங்கேற்றுள்ள பல்வேறு கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். மேலும் பொதுமக்களிடமும் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு உள்ளதால், இதுகுறித்து ஆட்சியாளர்கள், அரசும் என்ன முடிவு செய்யப்போகிறது என்பது பொருத்து மேலும் போராட்டம் குறித்து, பல அமைப்பினர் நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.