தமிழக அரசின் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பகுதியில் ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விற்பனை நிலையம், பணியின் போது உயிரிழந்த போக்குவரத்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கல், புதிய வழித்தடபேருந்து சேவை இயக்கம் போன்றவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நாமக்கல் ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ,நாமக்கல் எம்எல்ஏ., பெ.ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் இன்று (28.07.2024) மாண்புமிகு அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இணைந்து நிறுவியுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, பணியின் போது உயிரிழந்த 25 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய 7 புறநகர் மற்றும் 3 புதிய நகர்புற பேருந்துகள் என மொத்தம் 10 புதிய பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக சுமார் 7,500 புதிய பேருந்துகள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 1,000 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தர்மபுரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 11 புதிய அரசு பேருந்துகளையும், திருவள்ளுர் மாவட்டத்தில் 10 புதிய அரசு பேருந்துகளையும் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உத்தரவிட்டு ஏற்கனவே 16 ஓட்டுநர்கள், 72 நடத்துனர்கள், 2 தொழில்நுட்ப பணியாளர்கள் என 90 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, தற்போது 1 ஓட்டுநர், 24 நடத்துனர் கள் என மொத்தம் 25 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 நடத்துனர்கள் மகளிர் என்பது பெருமைக்குரியதாகும். மேலும், நீண்ட காலமாக வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபடாமல் இருந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் முதல் சென்னை – 2 பேருந்துகள், நாமக்கல் -சேலம் -மதுரை வழியாக 1 பேருந்து, நாமக்கல் – கோயமுத்தூர் வழியாக 1 பேருந்து, ராசிபுரம் – சேலம் – பெங்களூர் வழியாக – 2 பேருந்துகள், திருச்செங்கோடு – சேலம் – சென்னை வழியாக 1 பேருந்து என 7 புதிய புறநகர் பேருந்துகளும், நாமக்கல் – காரவள்ளி வழியாக 1 பேருந்து, நாமக்கல் – மோகனூர் வழியாக 1 பேருந்து, மற்றும் திருச்செங்கோடு – குமாரபாளையம் வழியாக 1 பேருந்து என 3 புதிய நகரப் பேருந்துகள் மொத்தம் 10 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை இலாப நோக்கம் அற்ற சேவை துறை ஆகும். அந்த வகையில் மகளிருக்கு இலவச பேருந்து விடியல் பயணத்தை அறிவித்தார்கள். மகளிருக்கான இலவச பேருந்து விடியல் பயணம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சேவையின் மூலம் பணிக்கு செல்லும் மகளிர், சிறு வியாபாரம் செய்பவர்கள் பயன்பெற்று வருகின்றார்கள் என்றார்.
விழாவில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இணைந்து நிறுவியுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, பணியின் போது உயிரிழந்த 25 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 7 புதிய புறநகர் பேருந்துகள் மற்றும் 3 புதிய நகர்புற பேருந்துகள் என மொத்தம் 10 புதிய பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களுக்கு கொடியசைத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து துறை அலுவலர் என பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, அத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர்.சின்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ., கே.பி.இராமசுவாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்முடி, பொது மேலாளர் பி.கோபாலகிருஷ்ணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்