ராசிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஒய்.நிவேதிதா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் நகராட்சியில், பொதுமக்களின் மனுக்கள் மீது பல மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டிருந்தது.

ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் புதிய வரி விதிப்பு, பெயர் மாற்றம் ,குடிநீர் இணைப்பு, நிலவரி விதிப்பு, கட்டிட அனுமதி போன்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திதாக இவர் மீது பல்வேறு அமைப்பினர் புகார் கூறியிருந்தனர். இவரது பொறுப்பு, அதிகாரத்தை எல்லாம் நகராட்சி மேலாளர் வசம் கொடுத்துவிட்டு, பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லாமல், தனது கடமையை தட்டி கழித்து வந்தார். மேலும் கடந்த ஆட்சியில் அணைப்பாளையம் திறப்பு விவகாரத்தில், இவர் தன்னை காப்பாற்றிக்கொண்டு, நகராட்சி உதவி பொறியாளரை தனது அதிகாரத்தை மீறி பணியிட நீக்கம் செய்து, தன் மீதான நடவடிக்கையில் இருந்து தப்பினார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி பொறியாளர் ரவி, ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்தது தவறு என வழக்கில் முறையிட்டு உயர்நீதி மன்ற உத்தரவை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தது ஆணையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகராட்சி நிர்வாக வருவாய் பிரிவு உதவியாளர்கள் உள்ளிட்டவர்களின் மெத்தென போக்கால் பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் மீதும் 100 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டிய நிலையில், நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் வைத்திருந்தனர் என மனுதாரர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. ஆனாலும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்காமல் மனுதாரர்கள் அலைகழிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. மேலும் ஆணையாளர், நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் மூவரும் வேறு வேறு திசையில் செயல்பட்டதால் எந்த மனுக்கள் மீதும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் இவர் அறந்தாங்கி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து குமாரபாளையம் நகராட்சியின் ஆணையாளர் சி.ரமேஷ் ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக செயல்படுவார் என நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





