நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நகரின் அனைத்து கடைகளும் வியாழக்கிழமை மூடப்பட்டு வணிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கடையடைப்ப போராட்டத்தால் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு – நகர மக்கள் நலக்குழு அறிவித்துள்ள இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினாலும், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காரணத்தினாலும், பேருந்து நிலையம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற அண்மையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. நகரில் பல்வேறு சங்கத்தினரிடம் கருத்தும் கேட்கப்பட்டது. இதில் தற்போதைய பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அணைப்பாளையம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கும் வகையில் அப்பகுதியில் தனியாரிடம் இருந்து 7 ஏக்கர் நிலம் நகராட்சிக்கு தானமாக பெறப்பட்டு அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றம் செய்வது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், 7 கி.மீ.தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையம் மாற்றம் செய்வதற்கு ராசிபுரம் மக்கள் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் பேருந்து நிலையத்தை 3 கி.மீ. தொலைவிற்குள் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், சிலர் சாலைகளை விரிவாக்கம் செய்து, புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினாலே தற்போதைய பேருந்து நிலையம் போதுமானது, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். பேருந்து நிலைய மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு அமைப்பினரும் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தி, கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட முடிவு செய்தனர். இதனையடுத்து அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் கடையடைப்பு நடத்த ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை நேரில் வினியோகம் செய்திருந்தனர்.
பெரும்பாலான கடைகள் அடைப்பு: இதனையடுத்து பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு அறிவிப்பின்படி வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நகரில் அனைத்துக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கச்சேரி வீதி, கடை வீதி, சின்னக்கடை வீதி, கவரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் மருந்து கடைகள், பால் பொருள் விற்பனை கடைகள், தவிர மளிகை கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி கடைகள், மொபைல்போன் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நகரில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகள், அரசு அலுவலகள், பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு: இந்த போராட்டத்தை தொடர்ந்து ராசிபுரம் நகரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் ராசிபுரம் வந்து நேரில் பார்வையிட்டு சென்றார். இதே போல் சேலம் மண்டல நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கண், ராசிபுரம் பேருந்து நிலையத்தையும், பேருந்து நிலையத்துக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டு பின்னர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கி.சேகர் உள்ளிட்ட அலுவலர்களிடமும் இதற்கான சாத்தியக்கூறுகள், பேருந்து நிலைய மாற்றத்துக்கான அவசியம் போன்றவை குறித்து ஆலோனை நடத்தினார்.
திமுக கூட்டணி கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு:பஸ் நிலையம் மாற்றத்துக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக, பாமக கட்சியினர் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூன்ஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் பங்கெடுத்துள்ளனர்.கடையடைப்பு போராட்டத்தால் நகரில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேலும் மக்கள் நலக்குழு சார்பில் ஜூலை.20-ல் மனித சங்கிலி போராட்டமும், பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு சார்பில் ஜூலை.23-ல் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.