ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் காமராஜர் 122-வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை.15-அன்று கல்வி வளர்ச்சி நாளாக அரசு கொண்டாடிவருகிறது.
ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜ் பிறந்த தினவிழா, கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் காமராஜர் வேடமணிந்து வந்தனர். பாரம்பரிய கிராமப்புற கலை நிகழ்ச்சிகள், நடனம், குச்சிபிடி, பரதநாட்டியம், விவசாயி வேடம், பொம்மலாட்ட பாடல்களுடன், நடனக் கலை நிகழ்ச்சிகளும் நடத்திக்காட்டினர். முன்னதாக காமராஜரின் திருவுருவப்படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் கு.பாரதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தன், செயலர் கே.ராமசாமி, மாவட்ட ரோட்டரி இமேஜ் தலைவர் ஆர்.திருமூர்த்திரவி, கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், கே.ரங்கராஜன், ஆர்.அனந்தகுமார், பி.கண்ணன், தனபால், தினகர் உள்ளிட்டோர் பங்கேற்று மலர்தூவி காமராஜர் திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், சான்றிதழ்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன. முன்னதாக வனிதா கிளப், வாசசி கிளப் சார்பில் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ராசிபுரம் அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாஜன நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்னர்வீல் கிளப் நிர்வாகிகளும் இணைந்து காமராஜர் பிறந்த தினவிழாவினை கொண்டாடினர். பள்ளியின் தலைமையாசிரியர் பி.டி.நேசமாலா தலைமையில், இன்னர் வீல் கிளப் தலைவர் சுதாமனோகரன், துணைத் தலைவர் மல்லிகா வெங்கடாஜலம், செயலர் சிவலீலஜோதி ஆகியோர் பங்கேற்று காமராஜர் குறித்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினர்.

இதனை தொடர்ந்து ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகமான காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர்.ஸ்ரீராமுலுமுரளி தலைமை வகித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பச்சமுத்து உடையார், மாரிமுத்து, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, நகர காங்கிரஸ் பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி, நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் குமார், கே.டி.ராமலிங்கம், சண்முகம், செந்தில், மதுரைவீரன், கோவிந்தராஜன்,. ஜெயபால், பாஸ்கர், பிரகாசம், பெருமாள், பழனிவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதே போல் ஆர்.புதுப்பாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற விழாவில், ஆர்.பிரகஸ்பதி தலைமை வகித்தார். காமராஜர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். இதில் முத்துசாமி, ராஜேந்திரன், சரவணன், காவேரி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.