Tuesday, April 29, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக்கோரி ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்திட முடிவு

ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக்கோரி ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்திட முடிவு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றும் செய்ய முடிவு செய்துள்ள நகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக அண்மையில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகராட்சியில் கருத்து கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில், ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க இடம் தேவைப்படுவதால் சரியான இடத்தில் 7 ஏக்கர் யாராவது தானமாக கொடுத்தால், பேருந்து நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நாளிலேயே அணைப்பாளையம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவரிடமிருந்து தானமாக பெறப்பட்டதால், பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பு எழுந்தது. நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே இடம் தேர்வு செய்துவிட்டு தேவையில்லாமல் கருத்துக் கேட்பு கூட்டம் கண்துடைப்புக்காக நடத்தியுள்ளது என பலரும் குற்றம் சாட்டினர். நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்ட அணைப்பாளையம் பேருந்து நிலையம் அமைக்க ஏற்ற இடமில்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராசிபுரம் நகரின் தொழில், வர்த்தகம் பாதிக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், பல்வேறு கட்சியினர், சங்கங்கள், வியாபாரிகள், அமைப்புகள் பங்கேற்ற பேருந்து நிலைய மீட்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்துவதெனவும், ஜூலை.23-ல் உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ராசிபுரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட புறவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பேருந்து நிலையம் இடம் மாற்றும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை நடைபெறவிருக்கும் தொடர் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!