
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் இடி, மின்னல் தாக்கி பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. இதனால் ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ளிட்ட பல குடியிருப்புகளில் நாள் முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டது.
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மரங்கள் பல இடங்களில் சாய்ந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது. இடி மின்னல் காரணமாக ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர் கேட், பாலாஜி நகர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் அதே பேல் 25-க்கும் மேற்பட்ட டிாரான்ஸ்பார்களில் இன்சினேட்டர் கருவிகள் பழுதடைந்தது. இதன் காரணமாக ஆண்டகளூர்கேட், ஆர்.கவுண்டம்பாளையம் , வசந்தம் நகர் உள்ளிட்ட ஒரு சில பகுதியில் உள்ள பல குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் திங்கள்கிழமை இரவு முதல் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக இரவு நேரத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் தடை ஏற்பட்டது. இதனால் மின்வாரிய அலுவலர்கள் தலைமையில், மின் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மர் வெடித்து சேதமடைந்ததால், இதனை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ராசிபுரம் பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் இல்லாததால், நாமக்கல் பகுதியில் இருந்து டிரான்ஸ்பார்மர்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு பழுதான டிரான்பார்மர் மாற்றும் பணி நடைபெற்றது. மேலும் டிரான்ஸ்பார்மர்களில் இன்சினேட்டர் கருவியினை மாற்றும் பணியும் நடைபெற்றது. இப்பணியில் கூடுதலாக மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் செவ்வாய்க்கிழமை மாலை வரை மின்பாதிப்பு ஏற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் கிடைக்கவில்லை. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இரவுக்குள் மின்வினியோகம் சீரமைக்கப்பட்டுவிடும் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.