ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் சென்ற பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சிலர் அவ்வழியே சென்ற பிற இளைஞர்களை தடுத்து நிறுத்தி, தகராறில் ஈடுபட்டனர். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சாலையில் இருந்து கற்களை எடுத்து தாக்குதல் நடத்தியதால், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் சிதறி ஒடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவரை தாக்கிக்கொண்ட சம்பவத்தை தடுக்கச் சென்றவர்களுக்கு அடிவிழுந்தது. இதே போல் சில நாட்களுக்கு முன் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் இளைஞர் ஒருவர் பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள், நடத்துநர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்கள் பலர் அவரை பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் வந்து இளைஞர் போதையில் இருந்ததால், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், அச்சமின்றி பொதுமக்கள் சென்று வரும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும்.
