ராசிபுரம் வட்டாரப் பகுதியில் தென்னை மற்றும் பழமரங்களை காக்கும் போர்டோ கலவை குறித்து விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி பெற்று வரும் நாமக்கல் பி.ஜி.பி வேளாண் கல்லூரி மாணவியர் செயல் விளக்கமளித்தனர். நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவியர் ராசிபுரம் வட்டார பகுதியில் வேளாண் படிப்பின் ஒரு பகுதியாக 60 நாட்கள் நடைபெறும் வயல் வெளி பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் பயிற்சி பெற்று வரும் இவர்கள் பல்வேறு வயல்வெளிகளுக்கு சென்று வேளாண்மை உற்பத்தி பெருக்கும் குறித்தும், உரங்கள், ரசாயன கலவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கமளித்து வருகின்றனர்.
இதனையடுத்து ராசிபுரம் வட்டாரம் கூனவேலம்பட்டி கிராமத்தில் தென்னை மற்றும் பழமரங்களைக் காக்கும் போர்டோ கலவை விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அளித்தனர். இந்த போர்டோ கலவைக்கு சுண்ணாம்பு: மயில்துத்தம்: தண்ணீர்: (1:1:100) என்ற விகிதத்தில் எடுத்து, இதில் சுண்ணாம்பு கரைசல் ( சுண்ணாம்பு: தண்ணீர்=1:50) விகிதத்திலும் மயில் துத்தம் கரைசல் (மயில் துத்தம்: தண்ணீர்=1:50) விகிதத்திலும் தயார் செய்து பின் மயில் துத்த கரைசலை சுண்ணாம்பு கரைசலில் கலறியவாறு சேர்க்க வேண்டும். தயாரித்த போர்டோ கலவையை ஒரு நாளுக்கு மிகாமல் பயிர்களுக்கு தெளிக்குமாறு பி.ஜி.பி வேளாண் கல்லூரி மாணவியர் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்தனர்.