நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாயக் கூலித்தொழிலாளி பழனிவேல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், கொலையில் நெ.-கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பிச்சென்று தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

நெ.3, கொமாரபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பழனிவேல்(48) என்பவர் அத்தனூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கடந்த மே.2-ல் குத்திக்கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த வழக்கு விசாரணை தொடர்பாக அவரது மனைவி செல்வி, கூலிப்படையை சேர்ந்த நெத்திமேடு ரவி ஆகிய இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் இந்த கொலை தொடர்பாக நெ.3 கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து போலீஸார் அவரிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
வெண்ணந்தூர் அருகேயுள்ள நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்,(48) விவசாயி கூலித்தொழிலாளி. இவர் கடந்த மே.-2ம் தேதி குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அத்தனூர் ரயில்வே பாலத்தின் கீழ் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் போலீஸார் சம்பவ இடம் சென்று கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர் . இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணையில், பழனிவேலு மனைவி செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் இடையை பழனிவேல் இடையூறாக இருந்து வந்ததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதனையடுத்து சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த ரவி (38) என்பவரிடம் பேசி, அவர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டனர். இதனையடுத்து, பழனிவேலை பின் தொடர்ந்த ரவி, உடுப்பன்தான்புதூர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் செல்வி (36), ரவி (38) ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நெ.3 கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமியை போலீஸார் தேடிவருகின்றனர்.