Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தமிழகம் முழுவதும் கூடுதல் தண்ணீர் பந்தல் திறக்க பாமக மாணவர் சங்கம் வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் கூடுதல் தண்ணீர் பந்தல் திறக்க பாமக மாணவர் சங்கம் வேண்டுகோள்

நாடு முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக நடப்பு ஆண்டில் கோடை வெய்யில் தாக்கம் கூடுதலாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலையில் தமிழக அரசு கூடுதலாக தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என பாட்டாளி மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பாட்டாளி மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.பாலசுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை:

தற்சமயம் கோடைகாலம் என்பதால் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டைவிட வெயிலின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கின்றது. தமிழக அரசு ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவிட்ட போதிலும் தண்ணீர் பந்தல்கள் போதுமானதாக இல்லை. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், கடைவீதி, பேருந்து நிழங்கூடம், அரசு மருத்துவமனைகள், நடைபாதைகள் போன்ற இடங்களில் கூடுதலாக தண்ணீர் பந்தல் அமைத்து குடிதண்ணீர் வழங்க வேண்டும். இந்த கடுமையான சூழ்நிலையிலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவ மாணவியர்களும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இயற்கை மற்றும் பருவநிலை மாற்றம் மாறி வருகின்றது அதனை தடுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் கூட ஒரு அறிக்கையில் இதனை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை என்ற பெயரில் ஆண், பெண் இருபால் ஆசிரியர்களையும் தெருத்தெருவாக அலைய விடுகின்றனர். தங்கள் வீடுகளில் பிள்ளைகள் இருந்தால் தங்கள் பள்ளியில் கொண்டு வந்து சேருங்கள் என்று வீடுகள் தோறும் சென்று ஆள் பிடிக்கின்றனர். இதனை அரசு தடுத்திட வேண்டும். மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உச்சி வெயில் நேரத்திலும் குப்பைகளை அள்ளிச் செல்கின்றனர். இவர்களுக்கு எவ்வித வெயில் தடுப்பு உபகரணங்களும் கொடுப்பதில்லை. மேலும் இந்த கோடை காலத்தில் எல்லா வீடுகளிலும் மின்விசிறிகள் உபயோகம் அதிகமாக இருப்பதாலும், வீடுகளில் குளிர்சாதன வசதியின் பயன்பாடு அதிகமாக இருப்பதாலும், ஏப்ரல் மே, ஜூன் மாதங்களுக்கான மின் கட்டணத்தை பரிசீலனை செய்து கட்டணத்தை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கிராமப்புறங்களில் வழித்தடங்களில் உள்ள மரங்களை வனத்துறையினர் பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும். மலைகளில் உள்ள மரங்கள் உராய்வின் காரணமாக தீப்பற்றிக் கொள்கிறது. இதை அணைக்க கூடுதலாக தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். மூலிகைகள் அதிகம் உள்ள கொல்லிமலை, பச்சைமலை, கொடைக்கானல் போன்ற மலையடிவாரங்களில் தீயணைப்பு துறை வண்டிகள் கூடுதலாக வேண்டும். மேலும் ஹெலிகாப்டர் மூலம் தீயணைக்கும் வசதி செய்திட பரிசீலனை செய்திட வேண்டும். அப்போதுதான் பசுமையை நாம் காத்திட முடியும். இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இருப்பதால் இதை துரிதமாக தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என பாட்டாளி மாணவர் சங்கம் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம். இதே போல் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!