Sunday, August 23, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்உண்மைக்கு புறம்பான ஊழல் புகார்கள் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்புக்கு...

உண்மைக்கு புறம்பான ஊழல் புகார்கள் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிகாரம் உள்ளது: லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ.ராமராஜ் பேச்சு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஊழல் புகாரினை விசாரிக்கும் அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கு “நல்லாட்சி, ஊழல் தடுப்பு மற்றும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் நார்னாவரே மனிஷ் சங்கர்ராவ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ், லோக் ஆயுக்தாவின் தோற்றம், அமைப்பு, சட்டப்பூர்வ அதிகாரங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முறைகள் குறித்து விளக்கினார்.

நிர்வாக தாமதமும் ஊழலே:

அரசு அலுவலர்கள் வெறும் அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் அரசின் பிரதிநிதிகளாகவும், மக்களின் சேவகர்களாகவும் உள்ளனர். ஒரு குடிமகன் அரசு அலுவலகத்திற்கு வரும்போது, அலுவலரின் மூலம் அரசையே பார்க்கிறார். எனவே, ஒவ்வொரு அலுவலரின் செயல்பாடும் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தவோ குறைக்கவோ முடியும். ஊழல் என்பது லஞ்சம் பெறுவதில் மட்டும் முடிவதில்லை; அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், அரசு நிதி மற்றும் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துதல், தேவையற்ற நிர்வாகத் தாமதம் உள்ளிட்டவையும் நல்லாட்சிக்கு எதிரானவை என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.

உண்மைக்கு புறம்பான ஊழல் புகார்கள் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.
லோக் ஆயுக்தாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு எதிரான புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அவர்களது பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படலாம். ஆனால், “லோக் ஆயுக்தா நிர்வாகத்திற்கு எதிரான அமைப்பு அல்ல; நேர்மையான நிர்வாகத்திற்கு ஆதரவான அமைப்பு” என்று குறிப்பிட்ட அவர், நேர்மையான அலுவலர்கள் அச்சப்படத் தேவையில்லை. உண்மைக்கு புறம்பான புகார்களை அளிப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் லோக் ஆயுக்தாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். .

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அரசு ஊழியர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதைப் போல, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஒவ்வொரு ஊரிலும் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவில் ஊழல் எதிர்ப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.

ஊழல் அதிகரித்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரமும் பாதிக்கும்:

ஊழல் அதிகரித்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதோடு ஏழைகளின் எண்ணிக்கை உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடும். தேர்தல்களில் வாக்குக்காக வழங்கப்படும் பணம், பரிசு அல்லது முறையற்ற சலுகைகளை வாக்காளர்கள் நிராகரிக்கும் நாளிலிருந்தே ஊழலுக்கு எதிரான உண்மையான போர் தொடங்குகிறது. ஊழலுக்கு எதிரான போரில் ஒவ்வொரு அரசு ஊழியரும் குடிமகனும் பங்கேற்க வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் கேட்டுக்கொண்டார்.

உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஆளுமைக் குறியீட்டு மதிப்பீட்டில், ஊழல் கட்டுப்பாட்டுக்கான நூறு புள்ளி அளவுகோலில் இந்தியா 21.4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல், சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வுக் குறியீட்டில், இந்தியா நூற்றுக்கு 39 புள்ளிகளை பெற்று, கணக்கிடப்பட்ட 182 நாடுகளில் 91 ஆம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லாட்சியை உருவாக்குவது அரசு அலுவலர்களின் கடமை மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும், ஊழலைத் தடுப்பதில் ஊழல் நடைபெறாத நிர்வாகச் சூழலை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!