Wednesday, April 15, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தர்மயுத்த நாயகன் ஒபிஎஸ் திமுக இணைந்துள்ளது - தர்மம் தன்னை சூது கவ்வும்- மீண்டும் தர்மமே...

தர்மயுத்த நாயகன் ஒபிஎஸ் திமுக இணைந்துள்ளது – தர்மம் தன்னை சூது கவ்வும்- மீண்டும் தர்மமே வெல்லும் என்பதை மெய்பித்துள்ளது

தமிழக அரசியலில் வலிமையான சக்தியான திகழ்ந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைவையடுத்து, சசிகலா தன்னை முதலமைச்சர் நாற்காலியில் தான் அமரவேண்டும், அல்லது தனது குடும்பத்தினர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என காய் நகர்த்தினார். இதனையடுத்து பாஜக தூண்டுதல் பேரில் தற்காலிக முதலமைச்சரான ஒபிஎஸ்., ஜெயலலிதா சமாதியில் இதனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். தன்னை ஆளாக்கியவர்களை புறம் தள்ளி விசுவாத்தை மறந்ததன் விளைவு தான், தற்போது ஜெயலலிதாவால்,கடுமையாக எதிர்க்கப்பட்ட தீயசக்தி என சுட்டிக்காட்டப்பட்ட திமுகவுடன் ஒபிஎஸ் இணைந்துள்ள நிகழ்வு. அதிமுகவின் தற்போதையை நிலைமைக்கு ஒபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் தான் காரணம். அதுமட்டுமல்ல தர்மத்தை சூது கவ்வும், பின்னர் மீண்டும் தர்மே வெல்லும் என்பதையும் ஒபிஎஸ் தற்போதையை முடிவு மெய்ப்பித்துள்ளது.

தமிழக அரசியில் கட்சிகளில் தனித்த ஆளுமை பெற்ற தலைமை இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அரசியல் பார்வையாளர்கள், பொதுமக்களால் மட்டுமின்றி, அந்தந்த கட்சித் தொண்டர்களாலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அதிமுக கட்சியில் ஆளுமைமிக்க தலைமை இல்லாத நிலையில், தற்போதைய தலைமையின் மீது அதிருப்தி அணிகள், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, எதிலும் அதிகார வர்க்கத்தின் மமதை போக்கு, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு போன்றவற்றால் ஆளும் கட்சியின் மீது அதிருப்தி, தமிழக அரசியலில் பாஜகவின் ஆதிக்கம் அதிகரிப்பு, நடிகர் விஜய் அரசியல் வருகை, பாமக பிளவு, எதற்காக கட்சி தொடங்கப்பட்டதோ, அதனை மறந்து, எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைவு, தேமுதிக செல்வாக்கு சரிவு, சசிகலா தனிக்கட்சி தொடங்கும் முடிவு, அதிமுகவில் ஜெயலலிதா விசுவாசியாகவும், மூன்று முறைமுதலமைச்சராகவும் இருந்து ஒ.பி.எஸ். திமுகவில் இணைவு, போன்றவற்றால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் சூழ்நிலையே முரண்பட்டதாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது.

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், யாருக்கு சாதக, பாதகம் என்பதை மக்கள் விவாதித்து வருகின்றனர். இது குறிப்பாக அஇஅதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் புதிய கூட்டணிகள், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகின்றன.

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக இருதுருவங்களாகத் திகழும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அஇஅதிமுக, 2016
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இன்று அதன் வரலாற்றிலேயே மிகச்சவாலான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட தலைமைக்கான போராட்டங்கள், சசிகலா தனிக்கட்சி கண்டுள்ளதாலும், ஒபிஎஸ்., திமுகவில் இணைந்துள்ளதாலும், டிடிவி., தனிகட்சியாக கூட்டணியில் இணைந்துள்ளதாலும், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கட்சிக்கு தற்போது போட்டியில்லா தலைமையாக உருவாகியுள்ளார் இபிஎஸ்.இது ஒரு புறம் இருந்தாலும், வலுவான கட்சியாக உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்த ‘அமமுக’

கட்சியை கைப்பற்றுவதில் பல ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி, மற்றும் டிடிவி தினகரன் இடையே நிலவி வந்த கசப்பான உணர்வுகள், தேர்தல் அரசியலின் கட்டாயத்தால் தற்போது தணிந்துள்ளன. ஜனவரி 2026-ல், டிடிவி தினகரனின் அமமுக கட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக – பாஜக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது தென் மாவட்டங்களில் பிரிந்து கிடக்கும் அதிமுக வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. “ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கவே இந்த முடிவு” என தினகரன் இதனை நியாயப்படுத்தியுள்ளார்.

சசிகலா: தனிக்கட்சித் தொடக்கம்

அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று கூறி வந்த வி.கே. சசிகலா, பிப்ரவரி 24, 2026 அன்று (ஜெயலலிதாவின் பிறந்தநாள்) தனிக்கட்சி தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இபிஎஸ் இருப்பதை எதிர்த்து, கட்சியை கைப்பற்றுவேன் என முழங்கி வந்த சசிகலா, முயற்சி பலனளிக்காமல், தனிக்கட்சி கண்டுள்ளார். இது அதிமுக ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இணைந்த ‘தர்மயுத்தம்’ நாயகன் ஒபிஎஸ்:

இந்த அரசியல் மாற்றங்களின் மிக வியப்பான திருப்பம், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது தான். பிப்ரவரி 27, 2026 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். எடப்பாடி பழனிசாமி தன்னைக் கட்சியில் சேர்க்க மறுத்து, அவமானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தாமல் புறகணித்தது தான் என்பதை காரணம் காட்டி திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் மிக முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ஒருவர், அதன் பரம எதிரியான திமுகவில் இணைந்தது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திமுக தொண்டர்களே இதனை ரசிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

அஇஅதிமுகவின் தற்போதைய சவால்கள்:

இது போன்ற நிலைமைகளால் எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியின் ஒற்றைத் தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்புகளும் அவருக்குச் சாதகமாகவே உள்ளன. பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒரு வலுவான எதிரணியை உருவாக்க இபிஎஸ் முயல்கிறார்.
ஓபிஎஸ் போன்ற மூத்த தலைவர்களின் வெளியேற்றம் மற்றும் சசிகலாவின் புதிய கட்சி ஆகியவை தேர்தலில் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்கக்கூடும். மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிமுகவிற்கு ஒரு கூடுதல் நெருக்கடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை எப்படி சமாளிப்பார் எடப்பாடி என்பது அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு. வீழ்ந்தால் இனி யாரும் அதிமுகவை காப்பாற்ற முடியாது. வென்றால் எடப்பாடியை இனி யாரும் வீழ்த்தமுடியாது என்பதே அரசியல் கணக்கு.

அஇஅதிமுக தற்போது ஒரு ‘பிளவுபட்ட இயக்கமாக’ காட்சியளித்தாலும், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமையில், எதிர்ப்போர் யாருமின்றி அக்கூட்டணி ஒரு வலுவான தேர்தல் களத்தைக் கொண்டுள்ளது. எனினும், ஓபிஎஸ்-ன் திமுக இணைப்பு மற்றும் சசிகலாவின் புதிய கட்சித் தொடக்கம் ஆகியவை அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் எந்த அளவுக்குச் சிதைவை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே 2026-ன் வெற்றி அமையும். தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மும்முனை அல்லது நான்குமுனைப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான முடிவுகளுக்கு மே மாதம் வரை காத்திருப்போம்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!