ராசிபுரம் வட்டாட்சியர் குடியிருப்பில் விலை உயர்ந்த கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து ராசிபுரம் வனத்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

ராசிபுரம் வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் எஸ்.சசிக்குமார். இவரது சொந்த ஊர் பரமத்திவேலூர், இவர் கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக ராசிபுரம் வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள இவரது அரசு குடியிருப்பில் விலை உயர்ந்த சந்தன கட்டைகள், வன உயிரினங்களின் தோல்கள் இருப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில், ராசிபுரம் வனத்துறை வனச்சரகர் எம்.சத்யா தலைமையில் வனத்துறையினர் சுமார் 8 பேர் சோதனை நடத்தினர். முன்னதாக மாலை 4 மணி அளவில் வனத்துறையினர் சோதனை நடத்த சென்றபோது வட்டாச்சியர் அலுவலகத்திலும், அரசு குடியிருப்பிலும் வட்டாட்சியர் இல்லை. ஆய்வுக்காக வெளியே சென்றிருந்தாராம். இதனையடுத்து மாலை சுமார் 6 மணி அளவில் வட்டாட்சியர் அரசு குடியிருப்புக்கு வந்தார். அப்போது வனத்துறையினர் வட்டாச்சியர் அரசு குடியிருப்பில் சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு குடியிருப்பின் சாவி பரமத்திவேலூரில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வனத்துறையினர் நீண்டநேரம் காத்திருந்தனர்.

இதனையடுத்து ஒரு மணி நேரத்துக்கு பின் பரமத்திவேலூர் இருந்து ராசிபுரம் வட்டாச்சியர் அரசு குடியிருப்பின் சாவி கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் குடியிருப்பின் உள்ளே சென்று சோதனை நடத்தினர். மேலும் மேல் மாடி, குடியிருப்பின் உள் பகுதியில் பல இடங்களில் டார்ச் லைட் அடித்து சோதனை நடத்தினர். ஆனால் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. இதனை சோதனை முடிந்து திரும்பிய ராசிபுரம் வனச்சரகர் எம்.சத்யா இது குறித்து தெரிவிக்கையில், மாவட்ட வனத்துறை அலுவலருத்து கிடைத்த தகவலின் பேரில், அவரது உத்தரவின் அடிப்படையில் வட்டாட்சியர் அரசு குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. குடியிருப்பில் வன விலங்குகளின் தோல்கள், சந்தை கட்டைகள் போன்றவை இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு சோதனை செய்யப்பட்டதில் குடியிருப்பில் அது போல் ஏதும் இல்லை என தெரிவித்தார். ராசிபுரம் வட்டாட்சியர் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன சோதனை நடத்துவதாகவும், அனுமதியின்றி மணல் கடத்தல், கட்டுக்கள் கடத்தில் போன்றவற்றில் பிடித்து விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், இச்சோதனை நடந்ததுள்ளது.




