சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை தொடர்ந்து போதை பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ( 24.06.26)நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை, ராசிபுரம் ரோட்டரி சங்கம், ஜே.சி.ஐ. ராசிபுரம் மெட்ரோ சங்கம், இன்னர் வீல் சங்கம், தமிழ் நியூஸ் பீட், மிஸ்டர் ராசிபுரம் ஆகிய சமூக ஊடகங்கள், மாயா நடன குழு போன்றவை இணைந்து இதனை நடத்தியது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலைய வணிக வளாகம், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஊடகவியலாளர் ஆர்.ரமேஷ் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ சங்கத்தின் தலைவர் என்.சதீஷ்குமார், இன்னர் வீல் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் என்.சிவலீலா ஜோதி ஆகியோர் முன்னிலை வைத்து நிகழ்ச்சி குறித்து பேசினர்.

ராசிபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆர்.நாகலட்சுமி, உதவி காவல்துறை ஆய்வாளர் மனோகரன், சிங்க பெண்கள் அதிரடிப்படையின் உதவி காவல் ஆய்வாளர் கே.எஸ். பிரியா உள்ளிட்டோர் இதில் பங்கேற்று போதை பொருட்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முன்னதாக பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், பயணியர்களுக்கு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவசர உதவிக்கான காவல்துறையின் அனைத்து அலைபேசி எண்களும் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

பின்னர் மாயா நடன குழுவினரின் விழிப்புணர்வு நடன, நாடக கலை நிகழ்ச்சிகள் வாயிலாக குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்தும், குற்றங்களுக்கான புகார் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விளக்கும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ராசிபுரம் பழைய பேருந்து நிலைய வணிக வளாகம், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர் இடையேயும் இதே போன்று விழிப்புணர்வு பிரச்சாரங்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆர் பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பின் அதிரடிப்படையின் உதவி ஆய்வாளர் கே.எஸ்.பிரியா பள்ளி மாணவ மாணவர்களிடையே, போதை பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியம் குறித்தும், பெண்கள் சமுதாயத்தில் எப்படி தங்களை தற்காத்து கொள்வது குறித்தும், பெண் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்கு அவசர உதவி எண்கள் மற்றும் காவல்துறை செயலி பயன்படுத்துவது குறித்தும் விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், பி.கண்ணன், மஸ்தான், எம்.முருகானந்தம், சிட்டி ஆர்.வரதராஜன், ஆர்.அனந்தகுமார், வழக்குரைஞர் கே.சக்திவேல், பேராசிரியர் ஆர்.சிவக்குமார், ஜேசிஐ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக், வழக்கறிஞர் சதீஸ்குமார், பூபதி, மாயா நடனக்குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார், உதவி தலைமையாசிரியர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஜெ.பிரவீன்ராஜ் நன்றி கூறினார்.




