ராசிபுரம் நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படும் என ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் குறிப்பிட்டார்.
ராசிபுரம் நகர்மன்றக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெ.பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, புதைகுழி சாக்கடை திட்டம், மின் கம்பம் அமைத்தல், தெரு நாய்கள் தொல்லை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நகரில் காவிரி குடிநீர் தற்போது 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் இதற்கு மாற்றாக மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் உப்பு நீரும், பல்வேறு பிரச்சனைகளால் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து தரவேண்டும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், தற்போது நடைமுறையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில், தற்போது நாம் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கான பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதால் தான் தற்போது ரூ.850 கோடி மதிப்பிலான புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 98 சதம் முடிவடைந்துள்ளது. விரைவில் இத்திட்டத்தின் மூலம் காவிரி குடிநீர் தடையின்றி வழங்கப்படும். அதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு உப்பு நீர் முறையாக வினியோகிக்கப்படும் என்றார்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெ.பிரேம் ஆனந்த் பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கைகள் மன்ற உறுப்பினர்கள் மூலமாக நகராட்சிக்கு தெரியப்படுத்தினால், அதை நிறைவேற்றுவது அலுவலர்களான நமது கடமை. அதனை தட்டிக் கழிக்க கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றுகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையானாலும் மக்கள் பிரதிநிதிகள் தான் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்கள் என்பதால் நகர்மன்ற உறுப்பினர்கள் மனு மீது உடனடியாக தீர்வு ஏற்படுத்த முயல வேண்டும். மேலும் நகரில் உப்பு நீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் நிலையில் ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யவில்லை என்றால் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும் என்றார். இக்கூட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்த 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.