மாணவர்களை ஆளுமைமிக்கவர்களாக உருவாக்குவேத சிறந்த கல்வியின் அடையாளம் என பாவை வித்யாஸ்ரம் – டைனி சீட்ஸ் பள்ளி மழலையர்களுக்கான ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஊக்குவிப்பு பேச்சாளர் கிருஷ்ணவரதராஜன் குறிப்பிட்டார். நாமக்கல் -சேலம் பகுதியில் இயங்கி வரும் பாவை வித்யாஸ்ரம் – டைனி சீட்ஸ் பள்ளிகளில் மழலையர்களுக்கான ஆண்டு விழா பாச்சல் பகுதியில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்துப் பேசினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐடியா பிளஸ் பிசினஸ் சொல்யூசன் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா வரதராஜன் பங்கேற்றார். பாவை வித்யாஸ்ரம் பள்ளியின் மாணவத் தலைவர் சஹானா வரவேற்றுப் பேசினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து நாமக்கல் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் தலைமையாசிரியை நிரஞ்சனி, சேலம் பாவை வித்யாஸ்ரம் நர்சாி மற்றும் பிரைமொி பள்ளியின் தலைமையாசிரியை ரஜனி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினர் கிருஷ்ண வரதராஜன் விழாவில் பேசியது: சமீபத்திய ஒரு ஆய்வில் 60 சதவீத சாதனையாளர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் கல்வி மற்றும் இசை, நடனம், விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளிலும் முனைப்புடன் ஈடுபட்டதால் தான் இன்றளவும் தங்கள் துறையில் வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர். ஆனால் கல்வியில் மட்டுமே கவனம் வைத்தவர்களால் சாதனையாளர்களாகத் திகழ முடியவில்லை என்பதை அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். மதிப்பெண்கள் பெறுவதோடு, இசை, நடனம், விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடும் போது அவர்களின் தலைமைப் பண்புகள், முடிவெடுக்கும் திறன், குழு மனப்பான்மை, வழிநடத்தும் ஆற்றல் ஆகிய வாழ்க்கைத் திறன்கள் கிடைக்கின்றன. அப்படி பயிலும் கல்வியே ஒரு முழுமையான கல்வியாக இருக்க முடியும். அதனை உணர்ந்து பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு, இசை, நடனம், விளையாட்டு, நீச்சல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் தந்து மாணவ, மாணவியர்களை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்குவது வரவேற்கத்தக்க செயலாகும்.
இன்றைய தலைமுறையின் மிகப்பொிய பிரச்சனை கவனச் சிதறலாகும். அதற்குக் காரணம் அதிகப்படியான அலைபேசி பயன்பாடு மற்றும் அதில் நேரத்தை வீணடிப்பதாகும். மேலும் அது நம் முன்னேற்றத்தையும் தள்ளிவைக்கும். அதனோடு சமூகத் தொடர்பினை துண்டித்து, நம்மை தனிமைப்படுத்தும். குழந்தைகளுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த கிட்டப் பார்வை குறைபாடு, இப்பொழுது 2025-ம் ஆண்டில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகவே குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்களாகிய நீங்களும், அலைபேசியை அளவோடு பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுக்காமல், இல்லை என்ற சொல்லுக்கும் அவர்களை பழக்க வேண்டும்.
அப்பொழுது தான் அவர்கள் வளரும் போது எதிர்மறை சுழல்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரும். குழந்தைகளை அறிவிலும், அறத்திலும் சிறந்தவர்களாக நீங்கள் உருவாக்க வேண்டும். வாழ்வினை முன்னேற்றும் நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். தோல்வியை அவமானமாகக் கருதாமல், அது முயற்சியின் அளவு என்று குழந்தைகளுக்கு உணர வைத்து, இன்னும் முயற்சிக்க வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக வாழ்ந்துக் காட்ட வேண்டும். நீங்கள் அனைவரும் இணைந்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சதீஸ் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து இக்கல்வியாண்டில் இசை, விளையாட்டு, கல்வி என்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த மாணவ மாணவியர்களுக்கு பாிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர் டைனி சீட்ஸ் - பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் மாணவர் மன்ற உறுப்பினர் டி.ஆர்.ஸ்ரீநிதி நன்றி கூறினார். கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டி.ஆர். மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், துணைச் செயலாளர் என்.பழனிவேல், பொருளாளர் மஎன். இராமகிருஷ்ணன், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநர் (சேர்க்கை)கே.செந்தில், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் ரோஹித் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.