தி சோசியல் மீடியா கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் பங்கேற்பு

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் அனைத்து மன்றங்களின் துவக்க விழா மற்றும் மாணவத் தலைவர்கள் பொறுப்பேற்கச் செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் விழாவில் தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு சைபர் செக்யூரிட்டி துறை மாணவர் அஜ்மல் தாஷீன் அனைவரையும் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்து முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தி சோசியல் மீடியா கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவர்களை பொறுப்பேற்கச் செய்து வைத்துப் பேசினார். விழாவில் அவர் மாணவர்களிடையே பேசியது: உங்களின் நவீன சிந்தனை, ஆழ்ந்த கற்றல், படைப்பாக்கத் திறமை, புதுமை, கூரிய அறிவு ஆகிய அனைத்தையும் தலைவராக உருவாவதற்கு முக்கியமானவை. இது போன்ற ஆற்றல்களை ஒவ்வொருவரும் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தலைமைப் பண்புகளோடு செயல்பட வேண்டும். முதலாவதாக உங்களுக்கு எதை விரும்புகிறோம் என்ற தெளிவு வேண்டும். எந்த இலக்கினை நோக்கி பயணிக்க போகிறீர்கள் என்ற அறிவு வேண்டும். இரண்டாவதாக உங்களை நீங்களே ஆள வேண்டும். உங்கள் மனமும், உடலும் நீங்கள் சொல்வது போல் கேட்க வேண்டும். அப்பொழுது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். மேலும் உங்கள் நோக்கத்தினை பற்றிய தெளிவிருக்கும் போது அந்த தெளிவான மனநிலை, உங்கள் இலக்கினை நோக்கி உங்களை வழிநடத்தும். அதனோடு மற்றவர்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பொறுப்பிலும், நோக்கத்திலும் தடைகள் நேர்ந்தாலும், விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும். எப்பொழுதும் ஊக்கமுடையவர்களாகவும், சிறந்த ஒழுக்கமுடையவர்களாகவும் திகழ வேண்டும். உங்களின் தொடர்ச்சியான செயலும், ஒழுக்கமும் தான் உங்களை சாதனையாளர்களாக உருவாக்கும். இவைகளை நீங்கள் பின்பற்றும் போது, சிறந்த தலைவராக உருவாகி உங்கள் குழுவினை முனைப்புடன் வெற்றியை நோக்கி வழிநடத்த முடியும். இந்த பொறுப்பு உங்கள் செயலையும் தாண்டி உங்களுக்கு மேலாண்மை, தொழில்நுட்ப அறிவு, உறுதி, ஆற்றல் போன்றவற்றை வழங்கும். எனவே நீங்கள் உங்கள் பொறுப்பின் மகத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் அனைவரும் சமுதாயத்திற்கு பயனளிக்கும் சாதனையாளர்களாக உருவாக என்று பேசினார். முன்னதாக பொற்ற அனைத்து பிரிவுகளின் மாணவத்தலைவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இறுதியில் மூன்றாமாண்டு கணினி பொறியியல் துறை மாணவி சுவேதா நன்றி கூறினார். விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில், அனைத்து கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.