சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கலில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
போடி-சென்னை சென்ட்ரல் வரையிலான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த ரயில் வாரம்தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போடி-சென்னை இடையே இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தேனி மாவட்டம் போடி ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி மதுரை திண்டுக்கல் கரூர் மற்றும் சேலம் காட்பாடி வழியாக சென்னை வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி நாமக்கலில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேற்கண்ட ரயிலை நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். நாமக்கல் எம்பி யின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார் அதன் விவரம் வருமாறு…..
ரயில் எண் 20601/02 எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் அதிவிரைவு விரைவு வண்டியை நாமக்கல்லில் நிறுத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். இது நாமக்கல் பகுதி மக்களுக்கும், தினசரி ரயிலை பயன்படுத்தும் பயணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.