பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததே குற்றங்களுக்கு காரணம். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் கூட்டத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை மொத்த தமிழகமும் வெட்கி தலைகுனிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எந்தவித பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இந்த பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்திருக்கிறது என்ற செய்தி இன்னும் அதிர வைக்கிறது. பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. இந்த பாதுகாப்பு குறைவுக்கு காரணமான எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வேதனை என்றால் சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளிவந்திருப்பது அதைவிட கொடுமை. குற்றவாளி எந்த கட்சியை சார்ந்தவன் என்று கண்டுபிடிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் குற்றத்தின் தன்மையை திசை மாற்றும். எந்த கட்சி காரனாக இருந்தாலும் அவன் குற்றவாளி. மிக கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை தங்கள் நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும். வழக்கு விசாரணையில் வெளிப்படத் தன்மையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்ய வேண்டும்.
ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளும் ஆளுநருடைய பிடிவாத போக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் நியமிக்கப்படாமலேயே நிர்வாக திறமையற்று செயல்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாததும் இந்த கொடுமையான பாலியல் குற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. துணைவேந்தர் நியமிக்கப்படாத காரணத்தினால் யார் முடிவெடுப்பது என்பதில் குழப்பம். துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழங்களில் மாணவ, மாணவிகளுடைய படிப்பும் தரம் தாழ ஆரம்பித்திருக்கிறது. வெளிநபர்களுடைய பிரவேசமும் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு மாதக்கணக்காக, ஆண்டு கணக்காக நியமிக்கப்படாத துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.