நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மலையாம்பட்டி கிராமத்தில் மலையாள தெய்வம் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்தும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபொங்களாயி அம்மன் கோவிலில் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி, பொங்கல் வைத்து உறவினர்களுக்கு விருந்து படைப்பது வழக்கம். விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி தங்களது காணிக்கைகளை அம்மனுக்கு படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவானது ஞாயிற்றுக்கிழமை பூச்சாட்டுகளுடன் துவங்கியது. முன்னதாக பொங்களாயி அம்மன் சுவாமி, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்து படையல் மற்றும் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கோவிலுக்கு விடப்பட்ட கிடாக்களை சுவாமிக்கு முன் பூஜை செய்து பலி கொடுக்கப்பட்டது. பின்னர் விருந்து படைத்து அதிகாலையில் பக்தர்கள், உறவினர்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது.

இந்த சமபந்தி விருத்திக்காக 240 கிடாக்கள் வெட்டப்பட்டு சுமார் 2000 கிலோ இறைச்சி சமைக்கப்பட்டு, 500 கிலோக்கு மேலான அரிசியில் பொங்கல் வைத்து ஆண்களுக்கு மட்டுமே அசைவ உணவு வழங்கப்பட்டது. சமபந்தி திருவிழாவில் சேலம், கரூர்,திருச்சி, ஈரோடு ,தர்மபுரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.




