Friday, July 3, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்சேலம்- கரூர் இரு வழிப்பாதை திட்டத்தக்கு உடன் ஒப்புதல் வழங்க வேண்டும்- வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி., வலியுறுத்தல்

சேலம்- கரூர் இரு வழிப்பாதை திட்டத்தக்கு உடன் ஒப்புதல் வழங்க வேண்டும்- வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி., வலியுறுத்தல்

சேலம்- கரூர் இரு வழிப்பாதை திட்டத்தக்கு உடன் ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஸ்ணவ்விடம் நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்- சேலம் – நாமக்கல் – கரூர் இடையேயான 85 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதை 2013 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது இப்பாதையில் தினசரி 26 ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ஏராளமான சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தின் கோழித் தீவனத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக சராசரியாக வாரத்திற்கு 5 சரக்கு ரயில்கள் நாமக்கல் நிலையத்தில் சரக்குகளை இறக்குகின்றன. இதனால் இப்பாதையில் சரக்கு போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சேலம் – ஈரோடு – கரூர் வழித்தடத்திற்கு மாற்றாக இந்தப் பாதை மிகவும் முக்கியமானதாகும். ஈரோடு வழியாக செல்லும் ரயில்களுக்கு இயந்திர மாற்றம் (Loco Reversal) மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பயண நேரம் சுமார் 2½ மணி நேரமாகிறது. ஆனால் சேலம் – நாமக்கல் – கரூர் வழியாக அதே பயணத்தை சுமார் 1½ மணி நேரத்தில் முடிக்க முடிகிறது. இதனால் நேரம், எரிபொருள் மற்றும் இயக்கச் செலவுகள் கணிசமாகக் குறைகின்றன.

இத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட இருப்பிட ஆய்வு (Final Location Survey) ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளது. தற்போது மத்திய அரசின் ஒப்புதலை மட்டுமே எதிர்நோக்கி உள்ளது. தற்போது இந்த 85 கி.மீ. பாதை முழுவதும் ஒற்றை வழிப்பாதையாக இருப்பதால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதில் பல்வேறு செயல்பாட்டு சவால்கள் ஏற்படுகின்றன. மேலும், இப்பாதை ஒரு முக்கிய தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. ஒருபுறம் பெங்களூரு, மறுபுறம் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய ரயில் வழித்தடமாக இது செயல்படுகிறது.

எனவே, சேலம் – நாமக்கல் – கரூர் இருவழிப்பாதைத் திட்டத்திற்கு நடப்பு ஆண்டிலேயே நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி, பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2029 ஆம் ஆண்டிற்குள் திட்டத்தை நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்திட்டம் நிறைவேறினால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இயக்கத்திறன் அதிகரிப்பதுடன், தொழில் வளர்ச்சி, துறைமுக இணைப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டின் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!