தமிழ்நாட்டில் அரிசி விலை கடும் உயர்வு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என கொ.ம.தே.க. பொதுச்செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ5 முதல் ரூ10 வரை அதிகரித்துள்ளது. சீரகசம்பா அரிசி கிலோவிற்கு ரூபாய் 96 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த ஆண்டில் கோடை மழை மற்றும் பருவமழை சரி வர பெய்யாததால் தற்போதைய சாகுபடியும் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடாததாலும் குருவை சாகுபடியை உறுதி செய்ய இயலவில்லை. இதனால் தமிழகத்திலும் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரிசியின் விலை நாளுக்கு நாள் உயர்வதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நெல் உற்பத்தி குறைவு மற்றும் நெல் பற்றாக்குறையால் வரும் காலங்களில் அரிசி விலை மேலும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது. மேலும் அரிசி விலை உயர்வுக்கு டீசல் விலை உயர்வும் காரணம். லாரி வாடகை அதிகரித்ததும் முக்கிய காரணமாகும். இதுபோன்ற பல காரணங்களால் அரிசி விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது.
இவ் விலை உயர்வை உணர்ந்து தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? இது சம்பந்தமாக துறைசார்ந்த அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை வைத்து அரிசி விலையை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடத்தாதது ஏன்? மாற்று கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்சியில் சேர்பதற்க்கு காட்டும் அக்கறையை ஏழை, எளிய மக்களின் மீது காட்ட வேண்டும். இது போன்ற நிலைகளை உன்னிப்பாக கவனித்து விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




