Saturday, March 28, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே.5-ல் திருவாரூரில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு:...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே.5-ல் திருவாரூரில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு: வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு

தேர்தல் விதிமுறைகளின் கீழ் வியாபாரிகள் ரூ. 2 லட்சம் வரை பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்காவிட்டால், வரும் 31ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலக்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் மே.5-ல் நடைபெறுகிறது. இது குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் த.ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகித்தார். பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் மே 5ல், திருவாரூரில் 43-வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடக்கிறது. உள்நோக்கமின்றி வெளிப்படைத்தன்மையோடு, இந்த மாநாடு நடத்தப்படும். தமிழகம் முழுவதும் இருந்து, பல லட்சம் வணிகர்கள் பங்கேற்பர். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக தேர்தல் அலுவலர்கள் கடைபிடிக்கவில்லை. வணிகர்களை தொடர்ந்து நசுக்கும் வகையில், தேர்தல் பணிகள் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் செயல்படுகிறார்கள். இதனால், தமிழகம் முழுவதும் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. வணிகர்கள் வியாபார நோக்கத்திற்காக, ரூ. 2 லட்சம் வரை ரொக்க பணம் எடுத்துச் செல்ல, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வரும் 31ம் தேதி, சென்னையில் தேர்தல் ஆணைய அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இதில் முடிவு எட்டப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து, வணிகர்கள் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே, இதுகுறித்து பலமுறை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில், ஆன்லைன் வணிகம் மற்றும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் பெருகிவிட்டதால், 35 சதவீதம் உள்ளூர் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மத்திய, மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும். தற்போது வணிக சிலிண்டர்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கூறினார். கூட்டத்தில் பேரமைப்பின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!