தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வணிகர்கள் பாதிக்கப்பட கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் த.ஜெயக்குமார் வெள்ளைய்யன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டமன்ற தேர்தலையோட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.
வியாபாரிகள் தங்களின் தொழில் சம்பந்தமான பணம் மற்றும் சரக்குகளை கையாளும்போது தக்க ஆவணங்களுடனும், வசூலுக்கு செல்லும் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் பணத்தை வாங்கும் போது முறையான ரசீது வழங்கி அதற்கான நகலை உடன் வைத்துக்கொள்வதும் அவசியம்.
வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும்:
தேர்தல் விதிமுறைகளின்படி ரூபாய் 50,000 வரை மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக ரொக்கம் கொண்டு செல்வோர் முறையான ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்களின்றி கொண்டு செல்லும் ரொக்கம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்பதை கவனத்தில் கொண்டு வணிகர்கள் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். எனினும், சில நடைமுறை சிக்கலால் பெரும்பாலும் பணத்தை பறிகொடுப்பதும், பாதிக்கப்படுவதும் சிறு வியாபாரிகளும் விவசாய பெருமக்களும் தான் என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு, வியாபாரிகள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ரொக்கத்தின் வரம்பை ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க வழி செய்யும் வியாபாரிகளின் இன்னல்களை போக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் வியாபாரிகளுக்கு இம்மாதிரியான காலகட்டங்களில் தகுந்த வழிமுறைகளை வகுத்து, வியாபாரிகள் மக்களுக்கு வணிகச்சேவை ஆற்றிட துணை நிற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.





