ராசிபுரம் மெட்டாலா லொயோலா கலை அறிவியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரித் தலைவர் முனைவர் தோமினிக் ஜெயக்குமார் தலைமை வகித்துப் பேசினார்.
கல்லூரிச் செயலர் டேனிஸ் பொன்னையா இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து தொகுத்து வழங்கி தொடங்கி வைத்தார். துணை முதல்வர் பொன் ரூபன் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் முனைவர் ஜா. ஜோஸ்ப்பின் டெய்சி பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலாளர் முனைவர் எஸ்.வின்சென்ட் கலந்துகொண்டு, 217 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினார்.

விழாவில் அவர் பேசியது: பட்டம் பெற்ற மாணவர்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். நேர்மறை எண்ணத்தோடு, எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்வில் படிப்படியாக முன்னேறக் கற்றுக்கொள்ள வேண்டும். கடின உழைப்பு, மனவுறுதி, நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். படிப்பு தான் உங்களை உயர்த்தும். இதற்கு உதாரணமான நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்து அறிவியல் விஞ்ஞானி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், நாட்டின் பிரதமராக இருந்த பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன்சிங் போன்றோரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் பட்டம்பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் விழாவில் நிர்வாகத் துணைமுதல்வர் அமுதன், புல முதன்மையர்கள் ராஜபிரபு, ஜனனி ஐஸ்வர்யா, உள்தரமதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மரிய கேசியன் ஆனந்த், கல்லூரியின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் டேவிட் பிரபு உள்ளிட்ட துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.





