Thursday, February 19, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணி சார்பில் ஆர்பாட்டம்

ராசிபுரத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணி சார்பில் ஆர்பாட்டம்

பட்டியல் இன மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி பாஜக பட்டியல் அணி சார்பில் ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட பாஜக பட்டியலின மாவட்ட தலைவர் ஆர்.பி. தமிழரசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் டாக்டர் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொடர்ந்து பட்டியலின மக்களை வஞ்சிப்பதாக கூறி, திமுக அரசை கண்டித்தும், பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாஜக மாநில துணைத் தலைவர்கள் டாக்டர் கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி , தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக வழங்கிய நலத்திட்ட நிதிகளை, பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி உள்ளது. இதனை கண்டித்து தான் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. பட்டியலின பழங்குடியின மக்களின் நலனுக்காக திமுக அரசு எதையும் செய்யவில்லை. பட்டியலின மாணவர் விடுதிகளில் மின்சாரம், சீரான உணவு இல்லை. இதற்கு ஒரே தீர்வு இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். மக்கள்மீது அன்பு செலுத்துகின்ற ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் பேசியது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தன்னுடைய நிதிநிலை அறிக்கையில், நாடு முழுவதும் 22 சதவீதத்தை நிதியை பட்டியலின மக்களுக்காக வழங்கியுள்ளது. இந்த நிதியை தமிழகத்தில் திமுக அரசு உரிய முறையில் பயன்படுத்துவது இல்லை. தமிழகத்தில் மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை 46,866 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு அதில் ரூ.28 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி அனுப்பி உள்ளார்கள். இந்த தொகையிலிருந்து மகளிர் உரிமைத் தொகை போன்ற பல்வேறு வேறு வகைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இதற்கான உரிய கணக்குகளை பராமரிக்கவில்லை. இதற்கு மாநில நிதியமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். இதனை பட்டியலின மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி குரல் கொடுக்கும். அடுத்து எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இம்மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும். மத்திய அரசு நிதிநிலை அறிக்கையை, ஜீரோ பட்ஜெட் என்று திமுகவினர் கூறினார்கள். ஆனால் மாநில இடைக்கால பட்ஜெட் தான் ஜீரோ பட்ஜெட். ஒட்டுமொத்தமாக எல்லா துறைகளிலும் செய்யப்பட்டிருக்கிற தவறுகளை மறைத்து, தண்ட செலவுகளை செய்து, ஊழல்களை மறைத்து, மாநில பட்ஜெட் போடப்பட்டுள்ளது. எனவே இந்த அரசின் மீது ஒரு விசாரணை ஆணையம் அமையும். இந்த ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டிருப்பதால், தண்டனைக்குரியவர்களாக இவர்கள் மாறுவார்கள். அதிலிருந்து தப்புவதற்காகத்தான் ஒவ்வொரு துறையாக, திருட்டு கணக்குகளை சரியாக எழுதி பட்ஜெட் போட்டுள்ளார்கள்.

பாஜகவிற்கு, திடீரென்று பட்டியலின மக்கள்மீது அக்கறை வரவில்லை. நாட்டின் குடியரசு தலைவர் பதவியை வழங்கியது பாஜக. பட்டியலின மக்களுக்காக திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முடிவில் தெரியவரும் என்றார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக நாமக்கல் மாவட்ட தலைவர் கே.பி. சரவணன், அதிமுக ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்ரமணியம், அமமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.பழனிவேலு, பாஜக மாவட்ட துணைத் தலைவர்கள் வி.சேதுராமன், சுகன்யா நந்தகுமார், மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரவு மாநில அமைப்பாளர் ஆர்.லோகேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!