ராசிபுரம் நகரில் மூன்று ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்தின் குடிநீர் இணைப்பினை நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு செய்தனர்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் பல கோடி மதிப்பில் சொத்து வரி பாக்கி நிலுவை உள்ளது. இதனால் நகராட்சி அலுவலர்கள் கடந்த சில நாட்களாக தீவிர சொத்துவரி, குடிநீர் வரி நிலுவை பாக்கித்தொகையினை வசூலித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக சொத்துவரி செலுத்தாக கட்டிடங்களுக்கு சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம், சேலம் சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி கட்டிடத்தின் கடந்த மூன்று ஆண்டின் சொத்துவரி பாக்கி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 634 செலுத்தவில்லையாம். இதனையடுத்து வங்கி வளாகத்தில் நடவடிக்கை சென்ற நகராட்சி ஊழியர்கள், வங்கி கட்டிடத்தில் குடிநீர் இணைப்பினை துண்டிப்பு செய்து, சொத்து வரி பாக்கிசெலுத்திட அறிவுறுத்தினர். தொடர்ந்து இது போல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.




