மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சென்னை மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர் அமைப்பு இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் மற்றும் உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகள் குறித்த பயிலரங்கம் திங்கள்கிழமை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர் அமைப்பு தலைவர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சக்திவேல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர் மாணவர் அமைப்பு தலைவர் கோடீஸ்வரன், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் டாக்டர் குழந்தைவேல், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முனைவர் ஜி.ஆர். கங்காதரன், காஞ்சிபுரம் தேசிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் முனைவர் முக்கு நிசான் கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிலரங்கத்தையும், வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தினர்.
பயிலரங்கில், உயர்கல்வியில் மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை திறம்பட ஒருங்கிணைத்து கற்றல் சூழலை உருவாக்கும் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான கற்பித்தல் அணுகுமுறைகள் குறித்து வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். இப்பயிலரங்கில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதனுடன் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற முகாமில் 125 மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கின. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இளங்கோ, புல முதல்வர் முனைவர் ராஜவேல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் பிரபுபேராசிரியர் எல்லப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.




