தமிழகத்தில் நடந்துள்ள முடிந்துள்ள 234 தொகுதிகளுக்கான 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளை முதன்முறையாக வாக்களித்துள்ள புதிய வாக்காளர்களும், இளைஞர்கள் வாக்குகளுமே நிர்ணயம் செய்துள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதுவும் தமிழகத்தில் புதிய அரசியல் வரவான நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் தான் இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும். யார் தோல்வியுற வேண்டும் என்பதை தீர்மானித்துள்ளது. ஒரு கட்சி வென்றால் அதற்கும் காரணம் தவெக தான். ஒரு கட்சி தோற்றால் அதற்கும் தவெக தான் காரணமாக இருக்கும். மேலும் இன்னொன்றை தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் ஆட்சியில் ஊழல், அதிகாரத்தில் லஞ்சம் போன்றவற்றை மனதில் வைத்து அதற்கு எதிரான மனநிலையில், வாக்களித்துள்ளனர். இதன் வெளிப்பாடு தான் புதிய கட்சியான நடிகர் விஜய்-இன் தவெக கட்சிக்கு அளித்துள்ள ஆதரவு என்பதை குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில் அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தலிலேயே 15 சதம் முதல் 20 சதம் வாக்குகளை அள்ளும். வெற்றி வாய்ப்புகளை இல்லாவிட்டாலும் பல தொகுதிகளில் 2-ம் இடம் பெறும். விஜய்காந்த் கட்சி தொடங்கிய போது இருந்த ஆதரவை போல், இன்றைய இளைஞர்கள் புதியதை தேடுகின்றனர். இது இருக்கட்டும்.

வித்தியாசமான தேர்தலாக முடிவுகள் இருக்கும்:
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது இந்த தேர்தலில் என்றும் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட 90% மேலாக வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான முறையில் நடந்து முடிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது இந்த தேர்தல். அதாவது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் அரசியலில் கரைத்துக் குடித்த தலைவர்கள் இல்லாமல் நடந்தேறி இருக்கிறது இந்த தேர்தல். மற்றொன்று இந்த தேர்தலில் நாம் உற்று நோக்க வேண்டியது இளைஞர்களை தான். கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கும் மேலாக உள்ள புதிய வாக்காளர்களும், இளைஞர், இளைஞிகளும் இந்த தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று தான் தோன்றுகிறது.
திட்டமிட்டு செயல்பட்ட திமுக:
ஒரு பக்கம் ஆளும் கட்சியான திமுக சரியாக திட்டமிட்டு தனது தேர்தல் பணிகளை நடத்தி முடித்து இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களையும் சரி, வளர்ச்சி திட்டப்பணிகளானலும் சரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லபடியாக தான் செய்து முடித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சேர்க்க வேண்டியதையும், முறையான திட்டமிடுதலுடன் கச்சிதமாக சேர்த்துள்ளார்கள். இதனால் வெல்வோம் என நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் ஊழல், லஞ்சம், வெளிப்படையான சந்துக்கடைகள், லாட்டரி கடைகள், மணல், குன்றுகள் கொள்ளை, அதிகாரப் போக்கு, போதைப் பொருட்கள் தாராள நடமாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்ததால், பெண்கள், இளைஞர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கட்சியினரை ஒருங்கிணைக்காத அதிமுக:
அதே போல் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு அதிமுக எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும்கட்சி தவறுகளை சுட்டிக்காட்டி, தனது பிரச்சாரத்தை மட்டுமே நம்பி எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துச் சென்று இந்த தேர்தல் பணியை நடத்தி முடித்திருக்கிறார். சீட் ஒதுக்கீட்டில் தனது கட்சியினர் மத்தியிலும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் பெரிய பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டதே அவருக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. தமிழகத்தில் பாஜக வளர்ந்திருந்தாலும், மக்கள் பாஜகவை விரும்பி ஏற்காத நிலை இன்னும் தொடர்கிறது. மேலும் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக இருந்தாலும், அவரை தமிழ்நாட்டிற்கான ஒட்டுமொத்த தலைவராக பார்க்காமல், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராக பார்க்கப்படும் பார்வை தான் உள்ளது என சொல்ல வேண்டும். மேலும், எடப்பாடிகே.பழனிசாமி துணிச்சலாக ஒ.பி.எஸ்., டிடிவி., சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை ஒரம் கட்டி தேர்தல் களம் கண்டது, பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இது அவருக்கு தனிப்பட்ட முறையில் நன்மையாக இருக்கலாம், கட்சியின் நிலை பார்க்க வேண்டும். மேலும் ஆளும் திமுகவிற்கு எதிரான வாக்குகள் அதாவது, அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டிய வாக்குகள் நடிகர் விஜய் கட்சிக்கு மாறியிருந்தால் தேர்தல் முடிவிலும் மாற்றம் இருக்கும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் சில சமுதாயத்தினரிடம் இவருக்கு இருக்கும் ஆதரவு பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விஜய் கட்சி வாக்குகள்:
தமிழக அரசியல் வானில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் களமிறங்கி பெரும்பாலான வாக்குகளை பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். எந்தவித அரசியல் அனுபவம் இல்லாமல், தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூட அரசியல் கட்டமைப்பு எதுவும் இல்லாமல் தனி ஒருவராக தன் ரசிகர்களை மையப்படுத்தி இந்த தேர்தலில் அவர் களம் கண்டார். இவருக்கு சேர்ந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். கூட்டம் சேருவதற்கோ, ஒட்டுக்கோ எந்த காசும் இல்லை என்பது உற்று நோக்க வேண்டியுள்ளது.
அவருக்கு தமிழக இளைஞர்கள் பெரும்பாலான ஆதரவை அளித்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் வெற்றி பெற வேண்டும் யார் தோல்வி அடைய வேண்டும் என்ற முடிவை விஜய் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தான் முடிவு செய்யும். அவர் பெரும் வாக்குகளை வைத்து தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வந்தடையும். அதேபோல் நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகள் தமிழக அரசியலில் பெரும் பின்னடைவை இந்த தமிழக வெற்றி கழகத்தால் சந்தித்துள்ளன என்றுதான் முடிவுகள் வந்த பின் சொல்ல வேண்டி இருக்கும்.
இப்படி இருக்கையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான ஊடகங்கள் அதாவது ndtv, cnn, சாணக்யா போன்ற ஊடகங்கள் பெரும்பாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும், சில ஊடகங்கள் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும், அதைவிட சற்று சொல்ல வேண்டுமெனில் இன்னொரு ஊடகம் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் சொல்லி முடித்துள்ளது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவு ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. எப்பொழுதும் தமிழகத்தில் ஒரு பக்கம் தான் அலை வீசும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு சில தொகுதிகளை தவிர, சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே பக்கம் தான் சாய்வார்கள் என்பது வரலாறு. இந்த முறை அப்படி இருக்காது என்றே தோன்றுகிறது. தென் மாவட்டங்களில் ஒரு மாதிரியும், வட மாவட்டங்களில் ஒரு மாதிரியும், மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியும் தான் முடிவுகள் இருக்கும் என்றே தோன்றுகிறது.
அதன் காரணமாக பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளபடி யாரும் பெரிய அளவில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை இருக்காது என்றே தோன்றுகிறது. அதாவது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அந்த கட்சி கிட்டத்தட்ட கூட்டணியும் சேர்ந்து 130 தொகுதிக்கு மேல் பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு எனவே திமுக வெற்றி பெற்றாலும் சரி அதிமுக வெற்றி பெற்றாலும் சரி 125 ப்ளஸ் தொகுதி வரை தான் கூட்டணி கட்சிகள் பெறும்.
அதே போல் இரண்டாம் இடத்திற்கு வரும் கட்சி 100 ப்ளஸ் தொகுதிக்கும் உள்ளாக தான் கிட்டத்தட்ட பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. அதேபோல் நாம் பெரிதும் எதிர்பார்க்கின்ற தமிழக வெற்றி கழகம் அதிகளவில் வாக்குகளை பெறுவார்களே ஒழிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வெற்றி பெறுவார்கள் எனில் சென்னை பெரம்பூரில் போட்டியிட்டுள்ள விஜய் அல்லது ஒரு சில இடங்களில் அந்த கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் என மொத்தம் இரண்டு இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய விஷயமாக கருதப்படும்.
தமிழகத்தில் இன்னொன்றை பார்க்க வேண்டும் ஏன் விஜய்க்கு இந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என என்பதை நமது பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக புதிய வாக்காளர்கள் மனதிலும், இளைஞர்கள் மனதிலும் திமுகவும் சரி அதிமுகவும் சரி ஊழல் செய்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் என்ற அவர்கள் மனதில் இருக்கும் தாக்கம் தான் புதியதாக ஒருவர் வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தான் இதனை சொல்ல வேண்டும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தேனும் பாலும் ஒடாது:
தமிழகத்திற்கு ஒரு புதியவர்கள் தேவை என மனநிலை, புதிய சிந்தனை மக்களிடம், இளைஞர்களிடம் உள்ளது. எப்படி என்று பார்க்கலாம் என்ற அடிப்படையில் வரவேற்க வேண்டியதான். அதனால் தான் விஜய்க்கு இந்த வகையில் பெரும் ஆதரவு உள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடப்போவதில்லை. எந்த வித பெரிய மாற்றத்தையும் அவர் ஏற்படுத்த முடியாது. அவரை சூழ்ந்திருப்பவர்கள், பல கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான். சட்ட விரோத தொழில்களில் சம்பாதித்தவர்கள் தான். இவர்களை வைத்துக்கொண்டு எப்படி நியாயமான ஆட்சி நடத்திட முடியும்.
எனவே இந்த தேர்தல் முடிவுகளை எடுக்கப் போவது 20 சதம் வாக்குகளை கையில் வைத்துள்ள புதிய வாக்காளர்கள், இளைஞர்களை மையப்படுத்தி தான் உள்ளது. அவர்கள் தான் யார் வெற்றி பெற வேண்டும் யார் தோல்வியடைய வேண்டும் என்ற முடிவை எடுக்கின்றார்கள் என்பதை கட்சிகள் உணர்ந்து சிந்தித்து பார்த்து அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நல்ல முறையில் வழிநடத்திட வேண்டும். இன்னும் சில நாட்களில் பார்ப்போம் திமுக தலைமையில் ஆட்சியா? அதிமுக தலைமையில் ஆட்சியா ? என்று.
இருப்பினும் தேர்தல் முடிவுகள் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளை மெய்யாக்கிவிடுமோ என்று தான் தோன்றுகிறது.





